குரு தரும் யோகங்கள்

நவக்கிரகங்களில் குருபகவானுக்கென ஒரு தனியிடம் இருப்பதால் அவர் மூலமாகப் பெறப்படும் யோகங்களுக்கும் ஜோதிட சாஸ்திரத்தில் முக்கிய இடம் இருக்கிறது. அவற்றில் சிலவற்றை இப்போது பார்க்கலாம்…

ஹம்சயோகம்

நமது மூலநூல்கள் ஒரு மனிதனை அவன் இருக்கும் துறையில் உயர்வானவனாக கொண்டு செல்ல உதவுதாக சொல்லும், அதாவது மனிதர்களில் உன்னதமானவாக (மகாபுருஷ) ஒருவரை மாற்றும் பஞ்சமகா புருஷயோகம் என சொல்லப்படும் ஐந்து விதமான யோகங்களில் குருவால் பெறப்படுவது ஹம்சயோகம் ஆகும்.
இந்த பஞ்சமகா புருஷயோகங்களுக்கு ஏன் இந்த விளக்கம் அளிக்கிறேன் என்றால் ஒரு சிலர் இந்த யோகங்களில் ஏதேனும் ஒன்று இருந்தால் அவன் அரசனுக்கு சமமான யோகம் பெறுவான், அது மிகப் பெரிய ராஜயோகத்தைத் தரும் என்று மிகைப்படுத்தி எழுதுகின்றனர்.
என்னுடைய அனுபவ எழுத்துக்களைப் படிக்கும் எனது மாணவர்கள் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்…
இந்த தெய்வீக சாஸ்திரத்தை பரம்பொருளின் துணையுடன் நமக்கு அருளிய தெய்வாம்சம் பொருந்திய நமது ஞானிகள் எந்த ஒரு இடத்திலும் தேவையற்ற வார்த்தைகளையோ குழப்பமான அர்த்தம் தரும் சொற்களையோ ஒருபோதும் உபயோகப்படுத்தியதே இல்லை.
ஞானிகள் சொல்லும் ஒரு விஷயத்தை உங்களால் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் உங்களின் ஜோதிடஞானம் இன்னும் அந்த நிலையை அடையவில்லை என்றுதான் பொருள். அர்த்தத்தை அனர்த்தமாக்கிக் கொண்டீர்களேயானால் அது உங்களுடைய அனுபவக் குறைவாலும் புரிந்து கொள்வதில் உங்களுக்குள்ள சிக்கலாலும்தானே தவிர இந்த தெய்வீக சாஸ்திரத்தின் குறை அல்ல.
அதன்படி இவைகள் பஞ்சமகா புருஷயோகங்கள் மட்டும்தான். பஞ்சமகா புருஷ ராஜயோகங்கள் இல்லை.
ஒரு கிரகம் முறையான நீசபங்கத்தை அடைவதைக் கூட நீசபங்க ராஜயோகம் என்று தெளிவாகக் குறிப்பிட்ட நமது ஞானிகள் ஒளிக்கிரகங்கள் என்று சொல்லப்படும் சூரியசந்திரர்கள் தவிர்த்து குஜாதி ஐவர்கள் என்று நமது கிரந்தங்கள் குறிப்பிடும் பஞ்சபூதக் கிரகங்களான குரு சுக்கிரன் புதன் செவ்வாய் சனி ஆகியவை லக்ன கேந்திரங்களில் ஆட்சி உச்சம் பெறுவதை வெறும் மகாபுருஷ யோகம் என்றுதான் சொல்லியிருக்கிறார்களே தவிர ராஜயோகம் என்று சொல்லவில்லை.
ஒருவனை அரசனுக்கு நிகரானவனாகவோ அல்லது அரசனாகவோ உயர்த்துவது ஒளிக்கிரகங்களான சூரிய சந்திரர்களும் இவை தவிர்த்த வேறு சில விசேஷ கிரக அமைப்புகளான ராஜயோகங்களும்தான். உதாரணமாக சிலநிலைகளில் ராகு தரும் பர்வத ராஜயோகம் போன்ற அமைப்புகளைச் சொல்லலாம்.
அரசன் எனப்படுபவன் சகல அதிகாரங்களும் உடையவன். அவனால் நினைத்ததை நினைத்த நேரத்தில் சாதிக்க முடியும். அதேநேரத்தில் ஒரு கோடீஸ்வரன் என்பவன் பணக்காரன் மட்டுமே. அவன் அரசன் இல்லை. அரசனுக்கு அடங்கியவன் அவன். இது போலவே யோகங்களுக்குள் இருக்கும் நுண்ணிய வித்தியாசங்களை நீங்கள் புரிந்து கொள்வது பலன் சொல்வதில் உங்களின் ஞானத்தை அதிகப்படுத்தி பலனைத் துல்லியமாக்கும்.
அதன்படி பஞ்சமகா புருஷயோகங்கள் தத்தம் துறைகளில் ஒருவனை மேம்படுத்தும். அவனை மகாபுருஷனாக்கும். குரு வலுத்தால் அவர் குருவின் துறைகளில் பெரியவர். சனி வலுத்து இந்த யோகம் ஏற்பட்டால் அவர் கீழ்நிலைப் பணியாளர்களின் தலைவன். அவ்வளவே….! ராஜாவெல்லாம் இல்லை.
அதன்படி குருபகவான் சர மற்றும் உபய லக்னங்கள் எனப்படும் மேஷம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் ஆகிய எட்டு லக்னங்களுக்கு கேந்திரங்களில் ஆட்சி மற்றும் உச்சம் பெறுவதால் இந்த ஹம்சயோகம் உண்டாகும்.
இந்த யோகத்தின் இன்னொரு விளைவாக குருபகவான் லக்னங்களில் வலுப்பெற்றால் அந்த ஜாதகர் நல்லவராகவும் பிறரை நம்பிக் கெடும் ஏமாளியாகவும் இருப்பார். பொதுவாக வலுப்பெற்று லக்னத்தோடு சம்பந்தப்படும் குருபகவான் நல்லசிந்தனை, ஒழுக்கம், அன்பு, கருணை அளவுக்கு மீறிய மன்னிக்கும் தன்மை ஆகிய குணங்களைத் தருவார் என்பதால் இவர்கள் மிகவும் நல்லவர்களாக இருப்பார்கள்.
ஒரு நிலையில் தன்னைப் போலவே அடுத்தவர்களும் நல்லவர்கள் என்று நம்பி இவர்கள் ஏமாறுவார்கள் என்பதால் இவர்கள் நல்லவர்களாக இருப்பார்களே தவிர வல்லவர்களாக இருப்பதில்லை என்பது ஒரு குறை. மற்றபடி குருபகவான் வலுப்பெறுவதால் நல்ல குழந்தைகளையும் தனலாபம் எனப்படும் பணவரவையும் ஹம்சயோகத்தின் மூலம் தருவார்.
உபயலக்னங்களுக்கு கேந்திரங்களில் வலுப்பெறும் குருபகவான் கேந்திராதிபத்திய தோஷம் பெறும்போது கடுமையான கெடுபலன்களைச் செய்வார். பொதுவாக ஒரு சுபக்கிரகம் திரிகோணத்தில் இருப்பதே நல்லது எனும் நிலையில் குரு சிலநிலைகளில் கேந்திரங்களில் வலுப்பெறுவது எதிர்மறை பலன்களையும் தரும்.
அதேபோல கன்னிக்கும் மிதுனத்திற்கும் அவர் கேந்திராதிபதியாகவும் பாதகாதிபதியாகவும் வரும் நிலையில் ஏழாமிடமான பாதகஸ்தானத்தில் தனித்து வலுப்பெற்றால் தன் தசையில் பாதகங்களையும் செய்வார்.

கஜகேசரி யோகம்

அடுத்து குருவின் இன்னொரு மிகச்சிறந்த யோகமாக சொல்லப்படுவது கஜகேசரி யோகம். குருவும், சந்திரனும் ஒருவருக்கொருவர் கேந்திரங்களில் இருப்பதால் இந்த யோகம் உண்டாகிறது. இந்த யோகம் இருப்பவர் எதிரிகளை ஜெயிப்பார் என நமது மூலநூல்கள் குறிப்பிடுகின்றன.
எந்த ஒரு சூட்சுமத்தையுமே நமது மூலநூல்கள் மறைமுகமாகத்தான் குறிப்பிடும் என்பதையும் புரியும் தகுதிநிலை வரும்போது மட்டுமே அந்த சூட்சுமத்தின் உள்ளடக்கம் உங்களுக்குத் தெரிய அனுமதிக்கப்படும் என்பதையும் நான் அடிக்கடி எழுதிவருகிறேன்..
அதன்படி இதில் ஒளிந்திருக்கும் சூட்சுமம் என்னவெனில் கஜகேசரி யோகம் உள்ளவர்கள் எதிரிகளை ஜெயிப்பார்கள் என்றால் அவர்களுக்கு எதிரிகள் இருப்பார்கள் என்பதே அதில் அடங்கிருக்கும் சூட்சும உள்ளடக்கம்.
அதிலும் கஜம் என்றால் யானை. கேசரி என்றால் சிங்கம் எனும் போது இந்த யோகம் இருப்பவர்களுடைய எதிரிகளும் இவருக்குச் சமமாக வலுவானவர்களாகத்தான் இருப்பார்கள் என்பதும் சொல்லப்போனால் இவரை விடவும் எதிரிகள் வலுவானவர்களாக இருப்பார்கள் என்பதும் அடுத்து இவர்களே தங்களுடைய செயல்களால் எதிரிகளை உருவாக்கிக் கொண்டு பிறகு அவர்களை ஜெயிப்பார்கள் என்பதும் இதில் மறைந்திருக்கும் சூட்சுமம்.
எனவே கஜகேசரி யோகம் என்பது ஒரு பரிபூரண நன்மை தரும் அமைப்பு என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில் எதிரிகள் இல்லாத வாழ்க்கையே ஒரு மனிதனுக்கு நிம்மதியான வாழ்க்கை எனும்போது எதிரி இருப்பானேன் பிறகு அவனை ஜெயிப்பானேன்? இதுபோன்ற விசித்திரமான நிலைகளை இந்த அமைப்பால் குருபகவான் அருளுவார்.
அடுத்து ஒரு யோகம் என்பது சில நேரங்களில் ஒரு முக்கியமான கேள்விக்கு நீங்கள் பதில் சொல்ல உதவும் ஒரு துணை அமைப்பாக உதவி செய்யும்.
உதாரணமாக ஒருவருக்கு ஆறாம் பாவாதிபதி எனப்படும் கடன், நோய், எதிரி அமைப்பிற்குரிய தசை நடக்கும்போது அந்த தசையில் அவர் கடன் நோய் எதிரித்தொல்லை இவைகளில் பிரதானமாக எதைத் தருவார் என்ற கேள்விக்கு துல்லியமான பலன் சொல்ல கஜகேசரி யோகம் போன்ற அமைப்புகள் துணை புரியும்.
இதுபோன்ற நேரங்களில் அந்த ஜாதகத்தில் கடன் நோய்க்கு அதிபதியான சனிபகவான் வலுவாக இருந்தால் ஆறாம் அதிபதி தசையில் கடன் தொல்லை மற்றும் ஆரோக்கியக் குறைவும், சனியை விட வலுவாக கஜகேசரி யோகம் இருந்தால் அந்த தசையில் எதிரிகளின் தொந்தரவு இருக்கும் என்று பலன் சொல்லுங்கள். துல்லியமாக இருக்கும்.
அடுத்த வியாழன் குருபகவானால் உண்டாகும் குரு சண்டாள யோகம் போன்ற அமைப்புகளைப் பற்றிப் பார்ப்போம்.

சகடயோகம் நன்மையா தீமையா?

ஜோதிடத்தில் ஆரம்ப நிலையில் உள்ளவர்களைக் குழப்பும் சில விஷயங்களில் குருவினால் உண்டாகும் இந்த சகட யோகமும் ஒன்று. சிலர் சந்திரனுக்கு 6, 8, 12-ல் குரு இருப்பதால் உண்டாகும் யோகம் இது என்று நினைக்கின்றனர். உண்மையில் குருவிற்கு 6, 8, 12-ல் சந்திரன் இருப்பதே சகடயோகம் என்று நமது மூலநூல்கள் குறிப்பிடுகின்றன.
சகடம் என்றால் சக்கரம் என்ற பொருளில் இந்த யோகம் இருப்பவர் வாழ்க்கை உயர்வும், தாழ்வுமாக மாறிமாறி இருக்கும் என்று இதற்கு பொருள் சொல்லப்படுகிறது.
உண்மையில் எனது முப்பதாண்டு காலத்திற்கும் மேலான ஜோதிட ஆய்வில் இந்த யோகம் இருக்கும் பலர் நிரந்தரமாக உயர்வான நிலையிலோ அல்லது நிலையாக கஷ்டப்படுபவர்களாகவோ இருப்பதைப் பார்த்திருக்கிறேன். உயர்வு தாழ்வு என்பது ஒரு மனிதனின் தசாபுக்தி அமைப்பைப் பொறுத்தது. இது போல கிரக யோக அமைப்பைச் சார்ந்தது அல்ல.
இந்த அமைப்பு இருந்தால் உயர்வும், தாழ்வும் மாறிமாறி வரும் என்பது இப்போது ஒத்துவரவில்லை. அந்தக் காலத்தில் இந்த யோகம் இருந்தவர்களின் நிலைமை இவ்வாறு இருந்திருக்கலாம். அல்லது ஜோதிடத்தில் தன்னுடைய பங்கும் இருக்க வேண்டும் என்று இடையில் சிலர் காட்டிய கைவண்ணமாக இது இருக்கலாம்.
அதே நேரத்தில் இன்னொன்றையும் நான் வலியுறுத்திச் சொல்லுவது எந்த ஒரு யோகமாக இருந்தாலும் சம்பந்தபட்ட கிரகத்தின் நட்பு லக்னங்களுக்கு மட்டுமே முழுமையாக பலன் தரும் என்பதால் குருவின் யோகங்கள் அவரது நண்பர்களான சூரிய, சந்திர, செவ்வாய் ஆகியோரின் லக்னங்களுக்கே முழு பலன் அளிக்கும்.
சகட யோகம் என்பது நல்ல பலன்களைத் தராத ஒரு அமைப்பு என்பதால் சூரிய சந்திர செவ்வாயின் லக்னங்களான கடகம், சிம்மம், மேஷம், விருச்சிகம், மற்றும் குருவின் லக்னங்களான தனுசு, மீனம் ஆகியவைகளுக்கு கெடுபலன்களைத் தரும். அதேநேரத்தில் குருவின் எதிர் லக்னங்களான சுக்கிரன், புதன், சனியின் ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம் ஆகிய லக்னங்களுக்கு குருவிற்கு ஆறு, எட்டு, பனிரெண்டில் சந்திரன் இருக்கும் நிலையில் பாதிப்புகள் இருக்காது.
இன்னொரு விதிவிலக்காக குருவின் வீட்டில் சந்திரனோ, சந்திரனின் வீட்டில் குருவோ இருக்கும் நிலையிலும் குருவோ சந்திரனோ ஆட்சி உச்சம் பெற்றிருக்கும் நிலையிலும் இந்த யோகம் அமையப் பெற்றால் அது ராஜசகட யோகம் அல்லது கல்யாண சகடயோகம் என்று சொல்லப்பட்டு இதனால் சகட யோகத்தின் கெடுபலன்கள் இல்லாமல் நல்ல பலன்கள் விளையும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.