ஶ்ரீ ஹயக்ரீவர் வழிபாடு

ஶ்ரீ ஹயக்ரீவர் திருமாலின் அவதாரம் ஆகத் தோன்றியவர். தசவதாரங்களுக்கு முற்பட்ட காலத்திலே இவர் மனித உடலுடனும் குதிரை முகத்துடனும் தோன்றியவர்.பரிமுகன் என்றும் அஸ்வசிரவர் என்றும் குறிப்பிடப்படுவர். ஒருமுறை பிரம்ம தேவர் உறக்கத்தில் இருக்கும் வேளையில் மதுகைடபர் என்ற அரக்கர்கள் பிரம்மா படைத்த வேதங்களை திருடிச் சென்று அதள பாதாளத்தில் ஒளித்து வைத்து விட்டனர். தூக்கம் கலைந்த நான்முகனும் வேதங்களைக்காணாது மகாவிஸ்ணுவிடம் முறையிட அவரும் அவற்றை மீட்டு வருவதற்காக ஹயக்ரீவராக உருவெடுத்துச் சென்றதாக

அதள பாதாளம் வரை சென்று வேதத்தின் ஒரு பாடத்தில் உள்ள உத்கீதம் என்ற ஸ்வரத்தை உண்டு பண்ணி அதன் வழியே வந்த அரக்கர்களிடம் போரிட்டு அவர்களை அழித்தார். பின்னர் வேதங்களை மீட்டு வந்து கல்வியறிவு ஞானத்திற்கு வழிவகுத்துக் கொடுத்தார். பின்னர் வேதத்தை படைப்புத்தெய்வம் பிரம்மாவிற்கே ஆவணி மாதப் பெளர்ணமி அதாவது (சிரவணப்பெளர்ணமி) நாளில் சுடர்விட்டுப் பிரகாசிக்க கற்றுக்கொடுத்தார் என புராணங்களில் சொல்லப்படுகிறது. ஆக கல்வி கலை ஞானத்தின் தெய்வங்களுக்கு எல்லாம் குரு ஸ்தானத்தில் இந்த ஹயக்ரீவர் உள்ளார் எனவே இவரை போற்றி வழிபடுபவருக்கெல்லாம் கல்வி சிறப்புற அமையும்.

'ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே'

அதாவது தூய மெய்ஞ்ஞான வடிவமும் ஸ்படிகம் போன்று தூய்மையானவரும் அறிவு யாவற்றுக்கும் ஆதாரமானவருமாகிய ஹயக்கிரீவரை வணங்குகிறேன். என்று போற்றித் துதிக்கின்றனர்.
அவருடைய குதிரை முகம் சூரியனையும் வெல்லக்கூடிய ஆற்றல் மிக்க பேரொளியைப் பெற்றுள்ளதோடு நான்கு கைகளில் சங்கு, சக்கரம், பத்மமாலை, அபயம் என விளங்கும் அவர் லஸ்மி ஹயக்ரீவராக, வரத ஹஸ்த ஹயக்ரீவராக, அபயஹஸ்த ஹயக்ரீவராக, யோகஹயக்ரீவராக பல வித வடிவங்களிலும் விளங்குகிறார். கல்வியின் ஆக்கபூர்வ வளர்ச்சிக்கு தடையில்லாது பிள்ளைகள் அனைவரும் மன அமைதியுடன் கல்விகற்று சிறப்புடன் தேர்ச்சி அடைய ஹயக்ரீவர் துதி காயத்திரி முதலியவற்றை தியானித்தல் அவசியமாகிறது.

ஆத்திசூடியில் ஒளவை கூறியதுபோல்' நூல் பல கல் ' என அறிவை வளர்க்கும் நூல்களைத் தேடிப் படிப்பது போல் ஹயக்ரீவர் தியானத்தையும் கூறி மாணாக்கர் வாழ்வை வளம் பெறச்செய்வோம்.

ஹயக்ரீவர் காயத்திரி
'ஓம் தத் வாகீச்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹஸெள ப்ரஸோதயாத்'

மூலமந்திரம்

'உத்கீத ப்ரணவோத்கீத, ஸர்வ வாகிச்வரேச்வர
ஸர்வ வேதமயா சிந்த்யா, சர்வம் போதய போதய'

ஞானத்தையும் ஒருமுகப் பட்ட மனதையும் வீர்யமான சக்தியையும் அளிக்கவல்லதும், இச்சுலோகங்களின் அதிர்வலைகள் சொல்பவர்களின் நரம்புகளில் ஒருவகை நல்ல அதிர்வுகளை ஏற்படச் செய்து மூளையில் ஞானத்தைப் பெருக்கும் என்கிறார்கள் விஞ்ஞானம் உணர்ந்த வேத பண்டிதர்கள். ஆகவே ஹயக்ரீவரை வணங்கி கலைகளை கற்றத் தேர்ச்சி அடைவோம்.