விநாயகரின் அவதாரங்கள்

இந்தியாவின் பல பாகங்களிலும், தமிழகத்திலும், உலகெங்கும் பரந்து வாழும் இந்துக்களும், விநாயகசதுர்த்தி நன்நாளை கொண்டாடி வருகின்றனர்.
இந்தியாவின் சில பகுதிகளில் இது பெரும் கலாச்சார விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விநாயகரின் அவதாரங்கள் பற்றி காண்போம்.

கஜமுகன் யானை முகம் உடையவன், பெரிய வயிற்றை உடையவன், அண்ட சராசரங்களும் அவருள் அடக்கம். எலியை வாகனமாக கொண்டவர். அரிசிமா, மஞ்சள்மா, பசுஞ்சாணம் எதிலும் அவரை இலகுவாக பிடித்து வைத்து வணங்கக்கூடியவர்.

விநாயகர் பிரம்மச்சாரியாகவும், சித்தி புத்தி எனும் சக்திகளுடனுன் கிருகஸ்தாரராகவும் விளங்க வீற்றிருக்கிறார். ஞானம் என்பது; பிரும்மஸ்வரூபம் ஆதலால் ஞானப் பிரம்ம வடிவம் விநாயகர் ஆவார். சித்தி எனும் தேவி கிரியா சக்தியின் வடிவம்; புத்தி எனும் தேவி இச்சா சக்தியின் வடிவம். இச்சையும் கிரியையும் இருந்தால்தான் ஞானாத்தின் மூலம் ஒரு காரியத்தை செய்ய முடியும். இந்த தத்துவத்தின் விளக்கமாகவே ஞான கணபதி சித்தி, புத்தி தேவியர்களுடன் விளங்குகிறார். இச்சை கிரியை இவைகளுடன் ஞானத்தின் முலம் சிருஷ்டி, பரிபாலனம் ஆகியவைகளை நடத்துகிறார்.

விநாயக அவதாரங்களில் முக்கியமானவை 12 ஆகும். அவற்றில்,

"வக்ரதுண்ட கணபதி" சித்தி புத்தியை மணந்தவர் மும்மூர்த்திகளைப் படைத்தவர். சதுர்த்தி விரதத்தையும் மூர்த்திகளுக்குப் உபதேசித்து சக்தி கொடுத்தவர். சிந்தாமணியைக் கவர்ந்த கணன் எனும் அரக்கனை அழித்து சிந்தாமணியை மீட்டதால் "சிந்தாமணி கணபதி" எனவும் பெயர் பெற்றார். மேலும் கஜமுகாசுரனைக் கொன்றதால் "கஜானன கணபதி" எனவும், விக்கினங்கள் எனப்படும் கஸ்டங்களை நீக்கியதால் "விக்ன விநாயகர்" எனவும் பெயர் பெற்றார்.

சிந்து எனும் அரக்கன் மயில் வடிவில் வந்தபோது அவனை அடக்கி வாகனமாகக் கொண்டதால் "மயூரேசன்" எனப்பெயர் கொண்டார்.

 அனலாசுரன் செய்த கொடுமையால் துயரடைந்த தேவர்களின் துன்பம் தீர்க்க பெரிய வடிவம் எடுத்து அனலாசுரனை விழுங்கிவிட்டார். அவரது வெப்பத்தை போக்க தன்மை பொருந்திய சந்திரன் கலைகளை வைத்தனர். இதனால் "பாலசந்திரன்" எனப் போற்றப்பட்டார். சந்திரகலைகளை வைத்தும் அவரது வெப்பம் தனியாததால் அருகம்புல்லால் அர்ச்சித்த பின்பே அவரது சூடு தனிந்தது. அதனாலே அருகம்புல் அவருக்கு பிரியமாயிற்று.

 புகை வடிவில் வந்த அசுரனை புகையாலே அழித்து "தூமகேது" எனப்பெயர் பெற்றார். பலி எனும் அரக்கனைக் கொன்றதால் "கணேசர்" என அழைக்கப்பட்டார். யானையின் சித்திரத்தை பார்க்கும் போது பார்வதி பரமேஸ்வர்களிடம் தோன்றியதால் "கணபதி" என அழைக்கப்பட்டார். தேவர்களின் இடர் தீர்க்க விரும்பி அதிதி கணவரான காசியப்ப முனிவரின் உபதேசம் படி விநாயக மந்திரத்தை ஜபித்து மதோற்கடரை மகனாக பெற்றார்.  உமாதேவி துராசதன் என்ற அரக்கனை அழிக்க சிவபெருமான் முகத்தில் இருந்து ஐந்து முகமுடைய கணபதியாக துண்டி கணபதி தோன்றினார்.

வல்லபவ கணபதியாக மாரீசி முனிவரின் மகள் வல்லபையை மணந்து எமக்கு காட்சி தருகிறார். இப்படியாக பல வித அவதாரங்களை தெய்வங்களுக்காகவும், தேவர்களுக்காகவும், ரிஷிகளுக்காகவும் மானுடர்களுக்காகவும் எடுத்து அவர்களுக்கு வேண்டியதை தந்து அருள் புரிந்துள்ளார் என்பதை புராணங்கள், இதிகாசங்கள் மூலம் அறியலாம். ஆக இந்த விநாயக சதுர்த்தி நன்நாளில் கணபதியை துதித்து அருள் பெருவோம்.